கனடாவில் வாகன வேகக் கட்டுப்பாட்டு கேமராக்கள் சேதம்
கனடாவின் யார்க் பகுதி வாஸ் நகரில் மூன்று இடங்களில் நிறுவப்பட்ட ஒன்பது வேகக் கட்டுப்பாட்டு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவங்கள் ஜனவரி 11 முதல் ஏப்ரல் 24 வரை இடம்பெற்றுள்ளதாக யார்க் பிராந்திய போலீசார் (YRP) தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவங்கள் பெரும்பாலும் பீட்டர் ரூபர்ட் அவென்யூ, ஹில்டா அவென்யூ, மற்றும் நியூ வெஸ்ட்மின்ஸ்டர் டிரைவ் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
இந்த கேமராக்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக, குறிப்பாக ஆரம்பப் பள்ளிகள் எதிரில் உள்ளிட்ட அபாயமான இடங்களில் நிறுவப்பட்டிருந்தன.
சேதம் விளைவிக்கப்பட்ட கேமராக்கள் அனைத்தும் 24 மணி நேரத்துக்குள் பழுதுபார்த்து மீண்டும் சேவைக்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு பொதுச் சொத்து மீதான சேதம். இதற்கான செலவுகள் மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
இதுபோன்ற செயல் சட்ட ரீதியாக தண்டனைக்கும், சிறைக்காவலுக்கும் வழிவகுக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 42 வயதான வாஸ் நகரைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆனால் மீதமுள்ள சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் குறித்து தகவல் தேவைப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.