ட்ரூடோ பதவியில் இல்லாத நிலையிலும் அவர் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ள ட்ரம்ப்
G8 அமைப்பிலிருந்து ரஷ்யா வெளியேற முக்கிய காரணம் கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோதான் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
ரஷ்யாவை G8 அமைப்பிலிருந்து வெளியேற்ற எடுக்கப்பட்ட முயற்சிக்கு தலைமை தாங்கியது ஜஸ்டின் ட்ரூடோதான் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
விடயம் என்னவென்றால், ட்ரூடோ கனடாவின் பிரதமராவதற்கு ஓராண்டிற்கு முன்பே ரஷ்யாவை வெளியேற்றும் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது!
G8 அமைப்பிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது ஒரு மோசமான முடிவு என்று தான் கருதுவதாக தெரிவித்த ட்ரம்ப், ட்ரூடோவும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமாவும்தான் அதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மட்டும் இப்போதும் G8 அமைப்பில் இருந்திருக்குமானால், அந்த அமைப்பிலுள்ள மற்ற தலைவர்கள் புடினுடன் விவாதித்து, உக்ரைன் போர் வேண்டாம் என்று கூறியிருக்கமுடியும்.
ரஷ்யா மட்டும் G8 அமைப்பில் இருந்திருக்குமானால், இன்று பலரது உயிரிழப்புகளுக்குக் காரணமான இப்படிப்பட்ட ஒரு போர் நடந்துகொண்டிருக்காது என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
அதாவது, G8 என்னும் ஒரு அமைப்பு முன்பு இருந்தது. அதில் ரஷ்யா மற்றும் இன்று G7 அமைப்பிலிருக்கும் நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்திருந்தன.
2014ஆம் ஆண்டு, புடின் கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்தற்கு அப்போதைய கனேடிய பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் என்பவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, ரஷ்யாவில் நடைபெற இருந்த G8 உச்சி மாநாட்டை அந்த அமைப்பிலிருந்த மற்ற தலைவர்கள் புறக்கணித்தனர்.
அதற்கு பதிலாக, ரஷ்யா இல்லாமல், தாங்களாகவே பிரஸ்ஸல்ஸில் ஒரு உச்சி மாநாட்டை அவர்கள் நடத்த, G8 அமைப்பு மறைந்து G7 அமைப்பு உருவானது.
ஸ்டீபன் ஹார்ப்பர் மீது குற்றம் கூறுவதற்கு பதிலாகத்தான், தவறுதலாக ட்ரூடோ மீது குற்றம் சாட்டியுள்ளார் ட்ரம்ப்!