இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது ; ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், "இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் ட்ரம்ப், ஈரானால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அணு ஆயுதமற்ற ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை.

ஈரானின் இராணுவ வலிமை
அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது நல்லது. எனக்கு உலகத்திலுள்ள அத்தனை நேரமும் இருக்கிறது, ஆனால் ஈரானுக்கு அப்படியல்ல. கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது!.
ஈரானின் இராணுவ வலிமை முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அந்நாட்டின் கடற்படை கடலின் அடியில் கிடப்பதாகவும், விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கிண்டல் செய்துள்ளார்.
"ஈரானியத் தலைவர்கள் இப்போது நம்முடன் இல்லை, எங்களது கடல் வழித் தரை முற்றாக இறுக்கப்பட்டுள்ளது. இனி நிலைமை மோசமாகுமே தவிர சரியாகாது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
'வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்' அறிக்கையின்படி, ஈரானை அணு ஆயுதக் கொள்கையில் அடிபணிய வைக்க, அந்நாட்டின் மீதான கடல் வழி முற்றுகையை நீண்ட காலத்திற்கு நீடிக்குமாறு தனது அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட பூச்சியமாகியுள்ளது. இந்த முற்றுகையினால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ள போதிலும், இது அமெரிக்காவில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளை ட்ரம்ப் திடீரென இரத்து செய்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்பதில் வொஷிங்டன் பிடிவாதமாக உள்ள நிலையில், அமெரிக்காவின் கடல் வழி முற்றுகையை அகற்றாமல் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என தெஹ்ரான் அறிவித்துள்ளது.