தந்தையின் மரண தண்டனையின் போது உடன் இருக்க வேண்டும்: மகள் விடுத்த கோரிக்கை
அமெரிக்காவில் மரண தண்டனையை எதிர்கொண்டுவரும் நபரின் மகள், கடைசி நேரத்தில் தந்தையுடன் இருக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பொலிஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்த வழக்கில், 2005ல் இருந்தே மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார் கெவின் ஜோன்சன். நவம்பர் 29ம் திகதி இவருக்கு விஷ ஊசியால் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.
ஆனால் அவரது சட்டத்தரணிகள், மரண தனடனையை தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், கெவின் ஜோன்சனின் 19 வயதான மகள் புதிய கோரிக்கையுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தமது தந்தைக்கு விஷ ஊசி செலுத்தும் போது தாம் அவருடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றே கோரியுள்ளார். மாகாண நீதிமன்ற விதிகளின்படி 21 வயதுக்கு உட்பட்ட எவரும் மரண தனடனையை நேரில் பார்வையிட அனுமதிப்பதில்லை.
ஆனால், ஜோன்சனின் மகள் கோரா ரமே தமது தந்தைக்கு செலுத்தவேண்டிய மரியாதையை செலுத்த வேண்டும் என்கிறார். இந்த நிலையில், அமெரிக்காவின் ACLU அமைப்பு கோரா ரமே சார்பில் களமிறங்கியுள்ளது.
ரமே தொடர்பில் அவரது கல்விக்காக ஜோன்சன் தன்னால் இயன்ற உதவிகளை முன்னெடுத்துள்ளார் என கூறும் ACLU அமைப்பு, தற்போது ரமே மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், 19 வயதில் தான் ஜோன்சன் மரண தனடனைக்கு விதிக்கப்பட்டுள்ளார். அப்படியானால், 19 வயதுடைய அவரது மகள் ஏன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தக் கூடாது என்ற கேள்வியும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.