கொரோனாவால் மரணிக்கும் அபாயம்; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய திருமணம்
இங்கிலாந்தில், கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மில்டன் கெய்ன்ஸ் பகுதியைச் சேர்ந்த காதலர்கள் எலிசபெத் கெர் மற்றும் சைமன் ஓ பிரையன் இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், இருவருக்கும் ஜனவரி 9ஆம் திகதி, கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு இருவரும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சைமன் ஓ பிரையனின் உடல் நிலை மிகவும் மோசமானது.
அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருப்பதால் இருவருமே அதிர்ச்சியடைந்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செலும் ஓ பிரையன் உயிருடனும் திரும்பலாம் அல்லது அங்கேயே இறக்கலாம் என்பதால், காதலர்கள் இருவரும் துணிந்து முடிவெடுத்தனர்.
அதன்படி இருவரும் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே திருமணம் செய்துகொள்ள முடிவெடுது மருத்துவர்களிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.
ஆனால், சைமன் ஓ பிரையனின் உடலில் செயற்கை சுவாசத்திற்கும், உணவு செலுத்தவும் குழாய்கள் செலுத்த வேண்டி இருப்பதால், இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும் காதல் ஜோடிகள் இருவரும் மருத்துவர்களிடம் மன்றாடியதை அடுத்து மருத்துவர்கள் அதனை ஏற்ற நிலையில் , இருவரும் ஜனவரி 12ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சைமன் ஓ பிரையனின் உடல்நிலை சீராக மேம்பட்டு, தற்போது இருவரும் சாதாரண விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து காதல் ஜோடிகள், ”திருமணம் முடிந்த பிறகு எங்கள் முதல் முத்தத்திற்காகப் பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
திருமணத்துக்குப் பிறகு ஒவ்வொரு முறை மூச்சு விடுவதற்கும் போராடிய சூழலை வாழ்வில் மறக்க முடியாதது. எங்களது காதல் தான் எங்களை மீண்டும் உயிருடன் சேர வைத்துள்ளது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.