அமெரிக்காவில் 7 வயது சிறுமியை கொன்றவருக்கு மரண தண்டனை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாரடைஸ் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு ஏதெனா ஸ்டிரான்ட் என்ற 7 வயது சிறுமி மாயமானார்.
இது குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டுக்கு பார்சல் வழங்க வந்த பெட்எக்ஸ் நிறுவன டிரைவர் டானர் ஹார்னர் (34) என்பவர் சிறுமியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

தேடுதல் வேட்டையில் 2 நாட்களுக்கு பின் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி. மற்றும் ஆடியோ ஆதாரங்கள் ஹார்னருக்கு எதிராகக் கண்டறியப்பட்டன.
இதையடுத்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சிறுமியைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இவர் சமூகத்திற்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பார் எனக் கருதி டானர் ஹார்னருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தனர்.
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்ற வழக்கறிஞரின் வாதத்தை கோர்ட்டு நிராகரித்தது.