கொங்கோவில் எபோலா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொங்கோ, சூடான் மற்றும் உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த நாட்டு அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

அத்துடன், கொங்கோவில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,759 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை எபோலா பாதிப்பே இல்லாத பகுதியாக அறியப்பட்ட த்ஷோபோ மாகாணத்தின் கிசங்கனி பகுதியிலும் தற்போது புதியதாக எபோலா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கடந்த மே 15 ஆம் திகதி புதிய அலையாக அறிவிக்கப்பட்ட இந்த எபோலா தொற்று, வெறும் 2 மாதங்களுக்குள் ஆயிரக்கணக்கானோரைத் தாக்கியுள்ளமை ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கென கொங்கோவில் எபோலா பரவல் ஒருபுறம் அச்சுறுத்தி வரும் வேளையில், அங்குள்ள வைத்தியசாலைகள் பெரும் சவாலைச் சந்தித்துள்ளது. தற்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வைத்தியர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.