துருக்கியில் 10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை! சோகத்தில் மக்கள்!
நிலநடுக்கதால் துருக்கியில் 7,108 பேரும், சிரியாவில் 2,530 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.
மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் 7,108 பேரும், சிரியாவில் 2,530 பேரும் உயிரிழந்துள்ளனர், மொத்தம் 9,630 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. சிரியாவில் ஏற்கனவே நிலைமை மோசமாக இருந்தது. தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட வடக்கு சிரியாவின் பகுதிகளில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் அகதிகளுக்கு மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துருக்கியில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் மற்றும் அதன்பிறகு எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகிவருகின்றன.
மேலும் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள், மழை மற்றும் பனியுடன் மக்கள் போராடுவதையும், மலைபோல் குவிந்திருக்கும் சிதைபாடுகளுக்கு மத்தியில் மக்கள் உதவிக்காக அழும் அவலத்தையும் அழுகுரலையும் காட்டுகிறது.