தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச்சூடு ; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள அரச உயர்நிலைப் பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் வழக்கம்போல் வகுப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு கல்வி பயிலும் 14 வயதான மாணவர் ஒருவர் திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பாடசாலையில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அச்சமடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் வகுப்பறைகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஆரம்பத்தில் பாடசாலை ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பாடசாலையில் இருந்த 5 பேர், துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் மாணவரின் தாத்தா மற்றும் பாட்டி ஆகியோருடன், துப்பாக்கிச்சூடு நடத்திய 14 வயது மாணவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த அனைவரும் தலை மற்றும் மார்பு உள்ளிட்ட முக்கிய உடல் பாகங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் 14 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு குறித்த பாடசாலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் 14 வயது மாணவரிடம் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.