ஆயிரக்கணக்கானோருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்காவில் மரிஜுவானா வைத்திருத்தல் தொடர்பாக குற்றவாளி என அறிவிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முடிவானது மரிஜுவானா வைத்திருப்பதை குற்றமற்றதாக்குவதற்கான முதல் படி எனக் கூறப்படுகிறது. மரிஜுவானா வைத்திருந்ததற்காக மக்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையால் பலரது வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது எனவும் ஜோ பைடன் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1992 முதல் 2021 வரையான காலகட்டத்தில் மரிஜுவானா வைத்திருந்ததற்காக பெடரல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட சுமார் 6,500 பேர்கள் இதனால் பொதுமன்னிப்பு பெற உள்ளனர்.
மட்டுமின்றி, கொலம்பியா மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மரிஜுவானா பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு இலக்கான ஆயிரக்கணக்கானவர்களும் பொதுமன்னிப்புக்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தகுதியானவர்களுக்கு மன்னிப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான செயல்முறையை முன்னெடுக்குமாறு அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்டிற்கு ஜனாதிபதி பைடன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சான்றிதழ் பெறுவதால், வேலைவாய்ப்பு பெறவும், குடியிருப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு மாகாணங்களும் தங்கள் சட்டத்தின் கீழ் மரிஜுவானா வைத்திருந்ததற்காக தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிகைக்கையும் ஜோ பைடன் முன்வைத்துள்ளார்.