யாழ்ப்பாணத்திற்கு தொடருந்தில் பயணிக்கவுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு
கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான யாழ்தேவி தொடருந்தின் போக்குவரத்து இரண்டு மார்க்கங்களிலும் தாமதமாகும் என, தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
வுவுனியா மற்றும் ஓமந்தைக்கு இடையிலான தொடருந்து மார்க்கத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக, யாழ்தேவி தொடருந்தின் போக்குவரத்து தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை குறித்த மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் யாழ்தேவி தொடருந்து தாமதமாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.40க்கு புறப்படும் குறித்த தொடருந்து, முற்பகல் 11.35க்கு வவுனியாவை சென்றடைவதுடன், வவுனியா தொடருந்து நிலையத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்படும்.
பின்னர் குறித்த தொடருந்து பிற்பகல் 2.15க்கு வவுனியாவிலிருந்து, காங்கேசன்துறை நோக்கி புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், யாழ்தேவி 4078 என்ற கடுகதி தொடருந்து குறித்த காலப்பகுதியில் 30 நிமிடங்கள் தாமதமாகி வழக்கமான நேரத்திற்கு பதிலாக முற்பகல் 11 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் முன்பதிவுகளை இரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு பணத்தை திரும்ப பெற முடியும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.