அமெரிக்க நிதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம்
அமெரிக்காவின் 500 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேபாளத்தில் நூற்றுக்கணக்கானோர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டதோடு இறப்பர் குண்டுகளை பயன்படுத்தினர்.
நேபாளம் 2017 இல் அமெரிக்காவுடன் உட்கட்டமைப்பு நிதி தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதோடு இது இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் காத்மண்டுவில் பாராளுமன்றத்திற்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிதி நேபாளத்தின் இறையாண்மையை பாதிப்பதாக இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் தண்ணீர் பீச்சி அடித்ததோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களாலும் வீசி எறிந்தனர்.
இதன்படி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க பாராளுமன்றத்திற்கு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை அவகாசம் இருக்கும் நிலையில், ஆளும் கூட்டணி உட்பட அரசியல் கட்சிகளிடையே இந்த ஒப்பந்தம் பற்றி பிளவு நீடிப்பது இது தாமதிப்பதற்கு காரணமாகியுள்ளது.