ரஷ்யப் பாதுகாப்பு ஆலோசகரை வெளியேற்ற டென்மார்க் அதிரடி உத்தரவு!
கோபன்ஹேகன் அருகே நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் உக்ரைனிய ராப் பாடகர் ஒருவரைப் படுகொலை செய்ய ரஷ்ய உளவுத்துறை சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ள டென்மார்க், அந்நாட்டிலுள்ள ரஷ்யப் பாதுகாப்பு ஆலோசகரை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் இதனை அறிவித்துள்ளார்.
ரஷ்யத் தூதரை வெளிவிவகார அமைச்சிற்கு அழைத்து, ஏழு நாட்களுக்குள் ரஷ்யப் பாதுகாப்பு ஆலோசகர் டென்மார்க்கை விட்டு வெளியேற வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவைத் தெரிவித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யக் குடிமக்களுக்கான ஷெங்கன் விசாக்களை இடைநிறுத்துவது குறித்தும் டென்மார்க் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டென்மார்க்கின் உளவுத்துறை அமைப்பான PET வெளியிட்டுள்ள தகவலின்படி, கோபன்ஹேகன் புறநகர்ப் பகுதியில் உள்ளூர்க் குற்றக்கும்பல் ஒன்றின் உதவியுடன் ரஷ்ய உளவுத்துறை இந்தப் படுகொலையைத் திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற 'கிய்வ்ஸ்டோனர்' என்ற ராப் பாடகரே இலக்கு வைக்கப்பட்டதாக டென்மார்க் பொது ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 25-ஆம் திகதி குறித்த பாடகரின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த அரங்கிற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை மறித்துச் சோதனையிட்ட பொலிஸார், அதிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் கத்திகளைக் கைப்பற்றினர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இசை நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டது. 2021-ஆம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ள 'லாயல் டு ஃபேமிலியா' என்ற குற்றக்கும்பல் இந்தத் தாக்குதலுக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை கோபன்ஹேகன் அருகிலுள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு டென்மார்க் ஆண்கள் மீது, வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவியமை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் உத்தியோகபூர்வ விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டென்மார்க்கின் இந்த நடவடிக்கைக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் மரியா ஜகரோவா எச்சரித்துள்ளார். எவ்வித ஆதாரமும் இன்றிப் பழிவாங்கும் நோக்கில் இந்த வெளியேற்றம் நடைபெறுவதாக கோபன்ஹேகனிலுள்ள ரஷ்யத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.