புடின் ஓர் கொலையாளி: கடும் தொனியில் ஸெலென்ஸ்கீ
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தனது "நண்பர்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துள்ள நிலையில், புடின் ஓர் "கொலையாளி" என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கீ கடும் தொனியில் பதிலளித்துள்ளார்.
புடினை எவ்வாறு அழைப்பது என்பது அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பம்; ஆனால் எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு எதிரி, அவர் ஒரு கொலையாளி என ஸெலென்ஸ்கீ தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சீனாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோருடன் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பிற்கு முன்னதாக, புடினைத் தனது நண்பர் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், தங்களிருவருக்கும் இடையில் பல வருடங்களாகச் சிறந்த நட்புறவு நிலவுவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் நேற்றிரவும் தொடர்ந்துள்ளன. மத்திய டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திலுள்ள ஸெலென்ஸ்கீயின் சொந்த ஊரான கிரிவி ரி மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் சிறுவன் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், 52 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் 11 பேரும், வடமேற்கு ரிவ்னே பகுதியில் ஒருவரும் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அவசரகாலச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை, தலைநகர் கீவ்விலுள்ள பாலங்கள் மற்றும் மேற்கு உக்ரைனிலுள்ள புகையிரத நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய பாரிய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
27 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட 110 ஏவுகணைகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலை, "இந்த ஆண்டின் மிகப்பெரிய தாக்குதல்" என ஸெலென்ஸ்கீ வர்ணித்துள்ளார்.
கிரிமியன் பாலத்தை உக்ரைன் கடுமையாகச் சேதப்படுத்திய சில நாட்களின் பின்னர் ரஷ்யா இப்பதிலடித் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதல்கள் இடம்பெற்று சில மணி நேரங்களின் பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும், புடினும் ஸெலென்ஸ்கீயும் போரை நிறுத்த விரும்பும் நிலையில், தனக்கு அவர்களுடன் நல்ல உறவு இருப்பது மிகவும் சாதகமான விடயம் எனவும் குறிப்பிட்டார்.
புடின் அமெரிக்காவின் நண்பரா என்பது குறித்துத் தன்னால் கூற முடியாது என்றாலும், அவர் தனது நண்பர் என்பதை ட்ரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
எனினும், ட்ரம்பின் இக்கருத்தை நிராகரித்த ஸெலென்ஸ்கீ, "புடின் இரவு பகலாக மக்களைக் கொன்று கொண்டிருப்பதால், உலக மக்களின் பார்வையில் அவர் ஒரு கொலையாளியே. அவரை ஒரு 'நண்பர்' என அழைப்பதன் மூலம், அவர் மீது போதுமான அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பதே அர்த்தமாகிறது" எனச் சாடினார்.