கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்த பிறகு நாடுகடத்தப்பட உள்ள தாயும் மகனும்...
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்த ஒரு பெண், கனேடியரான தன் கணவரையும், கனடாவில் பிறந்த தன் பிள்ளைகளையும் பிரிந்து செல்லும் ஒரு நிலை உருவாகியுள்ளதால் அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
2003ஆம் ஆண்டு புகலிடக்கோரிக்கையாளராக கனடாவுக்கு வந்தார் Nike Okafor (39). நைஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணான Nike, தனக்கும் கிறிஸ்தவ இளைஞர் ஒருவருக்கும் பிறந்த தன் மூத்த மகனான Sydneyயை (21) தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என பயந்து மகனுடன் பாதுகாப்பு கருதி கனடாவுக்கு ஓடிவந்தார். அப்போது அவர் கர்ப்பமாகவும் இருந்திருக்கிறார்.
அவரது அகதிக்கோரிக்கை மறுக்கப்பட்டாலும், மேல் முறையீடு செய்து, எப்படியோ கனடாவில் தங்கிவிட்டார் Nike. கனடாவில் தன் குழந்தை பிறக்க, வேலை ஒன்றைத் தேடி, பிள்ளைகளை வளர்த்து, அதன் பின் மனதுக்கு பிரியமான ஒருவரை சந்தித்து திருமணம் செய்துகொண்டு தன் மூன்றாவது குழந்தைக்குத் தாயாகி...
இப்படியே வாழ்க்கை சென்றுகொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், Nikeம் அவரது மூத்த மகனான Sydneyயும் இம்மாதம் 26ஆம் திகதி நாடுகடத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கவே, அதிர்ந்து போய்விட்டது மொத்தக் குடும்பமும்.
நான் திரும்ப நைஜீரியாவுக்குச் செல்லவேண்டுமானால் அது என் வாழ்வையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என கண்ணீருடன் தெரிவிக்கும் Nike, என் கணவரிடமிருந்தும், எனக்கு கனடாவில் பிறந்த என் பிள்ளைகளிடமிருந்தும் பிரிக்கப்படுவேன், அதற்குப் பிறகு நான் உயிரோடு இருப்பேனா என்பது எனக்குத் தெரியாது என்கிறார்.
Nikeம் அவரது மகனும் நாடுகடத்தப்படும் நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்க, புலம்பெயர்தல் சட்டத்தரணியான Vakkas Bilsin, இந்த விடயத்தை பெடரல் நீதிமன்றம் முன் கொண்டு சென்றிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு மட்டும் கனடாவில் தங்க Nikeகுக்கும் அவரது மகனுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே Nikeன் கணவரான Rotimi Odunaiya தன் மனைவிக்காக ஸ்பான்சர் செய்திருக்கும் நிலையில், அது ஏற்றுக்கொள்ளப்படும் என நம்பிக் காத்துக்கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.
 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        