சூறாவளியால் சின்னாபின்னமான அமெரிக்காவின் பல மாகாணங்கள்: வீடுகள் தரைமட்டம்
பல அமெரிக்க மாகாணங்களில் சுழன்றடித்த சூறாவளி மற்றும் புயலால் இதுவரை 7 பேர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அலபாமாவில் வியாழக்கிழமை புயல் மையம் கொண்டுள்ள நிலையில், அங்கிருந்து சூறாவளியாக உருமாறி, அது கடந்து சென்ற பாதையில் பல குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது குடியிருப்பில் சிக்கியிருந்தவர்களில் 6 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 12 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்ஜியாவின் பட்ஸ் கவுண்டியில் ஐந்து வயது சிறுவனும் கொல்லப்பட்டதாக கூறபப்டுகிறது. மேலும், 40 முதல் 50 குடியிருப்புகள் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது.
வேருடன் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். வியாழன் மாலை வரையில் மொத்தம் 33 சூறாவளிகள் அமெரிக்க தேசிய வானிலை சேவையால் பதிவாகியுள்ளன.
மேலும், ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் வட கரோலினா ஆகிய பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் 100,000 க்கும் அதிகமானோரும், அலபாமா முழுவதும் 50,000 க்கும் மேற்பட்ட மக்களும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.