Z எழுத்தால் சூறையாடப்பட்ட கனேடிய துணிக்கடை
ரஷ்ய ஆதரவாளர்களால் பிரபலப்படுத்தப்படும் Z என்ற எழுத்தை அடையாளப்படுத்தியதால் ரொறன்ரோவில் துணிக்கடை ஒன்று மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரொறன்ரோ பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். ரிச்மண்ட் தெரு மேற்கு பகுதியில் அமைந்துள்ள D'Mila Accessories என்ற துணிக்கடையே, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு, செவ்வாய்கிழமை அதிகாலையில் அதன் கதவுக்கு முன் சிவப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. திங்கட்கிழமை, குறித்த நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்றில், Z என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே குறித்த துணிக்கடை தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது. ஆனால் செவ்வாய்க்கிழமை தொடர்புடைய புகைப்படத்தை அந்த நிறுவனம் நீக்கியிருந்தது.
உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்ய இராணுவத்திற்கான ஆதரவின் அரசியல் சின்னமாக Z என்ற எழுத்து பரவலாக அறியப்பட்டது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, இனப்படுகொலையை முன்னெடுக்கும் இராணுவம் மற்றும் ரஷ்ய ஆட்சியை ஆதரிக்கும் மக்கள் கனடாவிலும் இருப்பது திகைப்பூட்டுவதாகவும் வருத்தமளிப்பதாகவும் உள்ளது என முக்கிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம், செய்தி ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்திருப்போம் என குறிப்பிட்டுள்ள அவர்,
துணிக்கடை மீது தாக்குதல் முன்னெடுத்துள்ளதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.