ஒன்றாக படுக்க வேண்டாம்; தம்பதிகளுக்கு சீனா விடுத்த எச்சரிக்கை!
சீனாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், தம்பதிகள் தனித்தனியாக படுக்க வேண்டும் என்றும், அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மக்களிடையே தீவிர பரவலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரின் பெரும்பாலான பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் , தீவிர கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிகமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவித்ததை அடுத்து உள்ளூர் அதிகாரிகள் மிகத்தீவிரமான கட்டுப்பாட்டு நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றனர்.
ஆளில்லா விமானங்கள் வானில் பறந்து வந்து மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டன. அதனை கவனித்த அவர்கள் வீடியோவாக எடுத்து தங்களது நாட்டின் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
அந்த பதிவில், ஷாங்காய் நகர மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. உங்களது ஆத்ம விருப்பங்களை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள் என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
ஜன்னல்களை திறக்கவோ அல்லது பாட்டு பாடவோ செய்யாதீர்கள் எனவும் அதில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. மற்றொரு காணொளியில் , ஷாங்காய் நகர தெருக்களில் சுகாதார பணியாளர்கள் ஒலிபெருக்கிகளை வைத்து கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
தம்பதிகள் தனித்தனியாக படுக்க வேண்டும். முத்தமிட கூடாது. கட்டிப்பிடித்தலுக்கும் அனுமதி இல்லை. தனியாகவே சாப்பிடுங்கள். உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி என அந்த பகுதிவாழ் மக்களிடம் கூறியபடி செல்கின்றனர்.
அதோடு கடந்த ஒரு வாரத்திற்கு முன் 4 கால்களை கொண்ட ரோபோக்கள் ஷாங்காய் தெருக்களின் வழியே ரோந்து சென்று சுகாதார அறிவிப்புகளை வெளியிட்டகாணொளியும் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.