மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலுக்கு சொந்தமா ; அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனம்
மத்திய கிழக்கு நாடுகளின் பெரும்பகுதி இஸ்ரேலுக்கு சொந்தமானது என்ற இஸ்ரேலுக்கான அமெரிக்க துாதர் மைக் ஹக்கபியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
செய்தி நிறுவனம் ஒன்றின் வர்ணனையாளரான டக்கர் கார்ல்சன் என்பவர், இஸ்ரேலுக்கான அமெரிக்க துாதர் மைக் ஹக்கபியை சமீபத்தில் நேர்காணல் செய்தார்.
அப்போது அவர், 'பைபிளின்படி, ஆபிரகாமின் சந்ததியினருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம் இன்றைய ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் உள்ளடக்கியது.

அந்த நிலத்தின் மீது இஸ்ரேலுக்கு உரிமை உண்டா' என ஹக்கபியை கேட்டார். இதற்கு பதிலளித்த ஹக்கபி, 'நீங்கள் சொல்வதுபோல், இஸ்ரேல் அனைத்தையும் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை.
இருப்பினும், இஸ்ரேல் தன் எல்லையை விரிவாக்க விரும்பவில்லை. தான் வைத்திருக்கும் நிலத்தில் பாதுகாப்பாக இருக்கவே இஸ்ரேல் விரும்புகிறது' என கூறினார்.
ஹக்கபியின் இக்கருத்துக்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, குவைத், ஓமன் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, அரபு லீக் ஆகியவை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
கடந்த 1948ல் இஸ்ரேல் உருவானது முதல், அந்நாட்டிற்கு முழுமையான அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் இல்லை.
போர்கள், இணைப்புகள் மற்றும் அமைதி ஒப்பந்தங்கள் அடிப்படையில் அதன் எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.