கனடாவில் நாயினால் வீடொன்றுக்கு ஏற்பட்ட ஆபத்து : மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவின் ஒட்டாவா நகரில், ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று வெப்பமூட்டும் ஸ்கி கையுறையை (heated ski glove) கடித்ததனால் அதில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரி தீப்பற்றிய சம்பவம் ஒன்று, வீடொன்றுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை காலை, ஓர்லியன்ஸ் பகுதியில் உள்ள பெவிங்டன் வாக் (Bevington Walk) வீதியில் அமைந்த இரு மாடி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக ஒட்டாவா தீயணைப்பு சேவை (OFS) தெரிவித்துள்ளது.
புகை அலாரம் கண்காணிப்பு நிறுவனம் முதலில் தீ விபத்து குறித்து தகவல் வழங்கியதாகவும், அதே நேரத்தில் வீட்டின் உரிமையாளர் பாதுகாப்புக் கேமரா காட்சிகள் மூலம் தீ ஏற்பட்டதை உறுதிப்படுத்தி சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் கூறப்பட்டது.

இதேவேளை, அப்பகுதியில் சென்றவர்களும் 911 அவசர எண்ணிற்கு தகவல் வழங்கினர். தீயணைப்பு வீரர்கள் நான்கு நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தை அடைந்து, வீட்டின் தரைத் தள ஜன்னலிலிருந்து கனமான புகையும் தீப்பிழம்புகளும் வெளிவருவதை கண்டுள்ளனர்.
குழாய் மூலம் தீயை கட்டுப்படுத்திய பின்னர், வீட்டுக்குள் நுழைந்து மனிதர்கள் உள்ளார்களா என தேடுதல் நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த குடும்ப நாயை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அந்த நாய்க்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
சுமார் 10 நிமிடங்களில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்துக்குக் காரணமான நிகழ்வு அரிதானது என OFS பேச்சாளர் நிக் டி ஃபெசியோ தெரிவித்தார்.
பாதுகாப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படையில், லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்ட வெப்பமூட்டும் ஸ்கி கையுறையை நாய் சோபாவில் கண்டெடுத்து கடிக்கத் தொடங்கியதால், பேட்டரி சேதமடைந்து தீப்பற்றியதாக உறுதியாகியுள்ளது.
காட்சிகளில், கையுறையிலிருந்து புகை எழத் தொடங்கியதும் நாய் சோபாவிலிருந்து கீழே குதித்து சிறிது நேரம் பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், தீ சோபாவின் போர்வைக்கும் பரவி வீடெங்கும் தீப்பற்றியுள்ளது.
இந்த சம்பவத்தை முன்வைத்து, லித்தியம்-அயன் பேட்டரிகள் சேதமடைந்தால், குத்தப்பட்டால், நசுங்கினால் அல்லது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால், கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என ஒட்டாவா தீயணைப்பு சேவைகள் பொதுமக்களை எச்சரித்துள்ளன.