ஈரான் மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்!
ஈரான் மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்! அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் தொடர்பில் ஈரான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றாஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில், தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,ஈரானின் தலைவர்கள், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கெஞ்சிக் கேட்கின்றனர். ஆனால் பொதுவெளியில் தாங்கள் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறுகின்றனர்.

அதுமட்டுமன்றி ஓமன் நாட்டுடன் மட்டுமே பேசி வருகிறோம் என்று கூறி ஈரான் தலைவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர் என்று ட்ரம்ப் குற்றாஞ்சாட்டியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி, முழுமையாக அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டிலும், அமெரிக்காவின் 'எஃகு சுவர்' போன்ற கடற்படை முற்றுகையிலும் தான் இயங்குகிறது.அமெரிக்கா அனுமதித்தால் மட்டுமே அங்கு எதுவும் நடக்கும்.
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் அளிக்கும் விளக்கங்கள் வெற்றுப் பேச்சுக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் எக்காலத்திலும் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், ஓர் ஒப்பந்தம் ஏற்படும் வரை அல்லது அவர்கள் முற்றிலுமாகச் சரணடையும் வரை இந்த ராணுவ மற்றும் பொருளாதார முடக்கம் தொடரும் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.