பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானை அழித்துவிடுவேன் ; டொனால்ட் டிரம்ப் மிரட்டல்
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரானை கடுமையாகத் தாக்கி முற்றிலுமாக அழித்துவிடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை வழங்கிய நேர்காணல் இன்று வெளியான நிலையில், அதில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இருக்கிறோம்.
ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நான் ஈரானை கடுமையாகத் தாக்கி அழித்துவிடுவேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும், தடைகளை நீக்கவும் தயாரா எனக் கேட்கப்பட்டபோது அதற்கு “இல்லை” என டிரம்ப் பதிலளித்துள்ளார்.

பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகே அது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் வரை முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஈரான் சரியான முறையில் நடந்துகொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும் எனவும், ஒப்பந்தம் ஏற்பட்டால் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் விவகாரம் தற்போது பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஈரானிடமிருந்து முடக்கப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்தி வளைகுடா நாடுகளுக்கு உதவ அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது மேலும் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் டிரம்ப் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நிலவினாலும் அங்கு இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் சூழலில் டிரம்பின் இந்த கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.