கட்டாரில் இருந்து அபுதாபிக்கு விஜயம் மேற்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று மாலை கட்டாரில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார். அவரை சர்வதேச விமான நிலையத்தில் அமீரக ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்றார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13ஆம் திகதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார்.
அபுதாபியின் அமீர் (ஆட்சியாளர்) ஷேக் தமிம் பின் ஹமத் பின் கலீபா அல் தானியை சந்தித்து பேசி இருதரப்பு வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தார்.
பிறகு இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதனை தொடர்ந்து இன்று (15) மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் கத்தாரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
முன்னதாக அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு விமான நிலையத்திற்கு வந்த ட்ரம்பை அமீரக ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழங்க முப்படை இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதில் இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. பிறகு நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் இருதரப்பு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து ட்ரம்ப் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமீரகம்- அமெரிக்கா இடையே நீண்டகால நல்லுறவு நீடித்து வருகிறது. அமீரகம் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெற்று வருகின்றன. தொடர்ந்து வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், இராணுவம் மற்றும் விண்வெளித்துறைகளில் இருநாடுகளும் நெருக்கமான நட்புறவை பாராட்டி வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் இந்த சுற்றுப்பயணம் மத்திய கிழக்கு பகுதியில் பல்வேறு நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்திவருவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.