2600 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து பெண் கின்னஸ் சாதனை !
அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 2,600 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியம் தாய்ப்பால் காரணமாக தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதன்காரணமாக குறைந்தது மூன்று வருடங்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
ஆனால் ஒரு சில காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள், தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும் பெண்களுக்கு உதவிடும் வகையில் தாய்ப்பால் தானம் வழங்கப்பட்டு வருகிறது .
அதேவேளை , உலகம் முழுவதும் தாய்ப்பால் தானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயது பெண் அலிஸ் ஒகில்ட்ரி என்பவர் இதுவரை 2600க்கும் அதிகமான லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இவரது தாய்ப்பால் மூலம் சுமார் மூன்றரை லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு 1,569 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி சாதனை படைத்த இவர், தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.