கனடாவின் குடியிருப்பொன்றில் பாரிய தீ : 300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
கனடாவின் நோவா ஸ்கோஷியா மிடில் சாக்வில்லில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தினால் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஹாலிஃபாக்ஸ் பிராந்திய தீயணைப்பு மற்றும் அவசர சேவை குழுவினர் திங்கட்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் ஹான்வெல் டிரைவ், எண் 119-இல் அமைந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர்.
தீ இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் மாடிகளை கடந்து கூரைக்கு பரவியிருந்தது எனவும் காற்று வேகமாக வீசியதால் தீ விரைவாக பரவியது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என குறிப்பிட்டனர்.
ஹான்வெல் டிரைவ் 25 முதல் 119 வரையிலான வீடுகள் அனைத்தும் வெளியேற்றப் பகுதிக்குள் உள்ளதாக அறிவித்து மொத்தம் சுமார் 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புகை பாதிப்புக்கு உள்ளானவர்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.