அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நிலநடுக்கம் ; அவசரமாகத் திருப்பி அனுப்பப்பட்ட டெல்டா விமானம்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் நேற்று சனிக்கிழமை (28) 5.0 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதி அதிர்ந்ததுடன், நகரின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த பயணிகள் விமானம் ஒன்று கடைசி நேரத்தில் தரையிறங்குவதை இரத்துச் செய்து மீண்டும் வானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
லொஸ் ஏஞ்சல்ஸிற்கு அருகிலுள்ள மன்ஹாட்டன் கடற்கரை பகுதியில் உணரப்பட்ட இந்த பூமியதிர்ச்சியை தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் பதிவாகியுள்ளன.

முன்னெச்சரிக்கை
பூமியதிர்ச்சி ஏற்பட்ட சரியான தருணத்தில் ஓடுபாதையில் தரையிறங்கத் தயாராக இருந்த டெல்டா எயார்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாகத் தரையிறங்குவதைத் தவிர்த்து மீண்டும் மேலே பறக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இது முற்றிலும் சரியான தீர்மானம் என நகர மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார். மேலும், பின்னதிர்வினால் விமான நிலையத்தின் முனையம் ஒன்றின் கூரைப் பலகை இடிந்து விழுந்ததுடன் கண்ணாடிகளும் உடைந்து சிதறின.
உயிரிழப்புகள் அல்லது பாரிய கட்டமைப்புச் சேதங்கள் எதுவும் உடனடியாகப் பதிவாகவில்லை என லொஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் நிலம், வான் மற்றும் கடல் மார்க்கமாக முக்கிய உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அண்மைக்காலத்தில் பதிவான பெரிய பூமியதிர்ச்சிகளில் இதுவும் ஒன்று என பூமியதிர்ச்சியல் நிபுணர் லூசி ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ள நிலையில், மேலதிக பின்னதிர்வுகளுக்குத் தயாராக இருக்குமாறு கலிபோர்னியா அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.