முகநூலில் மடிக்கணினி விற்க முயன்றவருக்கு நேர்ந்த கதி!
கனடாவின் எட்மண்டன் நகரைச் சேர்ந்த ரிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் தளத்தில் தனது விலை உயர்ந்த 'டெல்' (Dell) ரக மடிக்கணினியை $4,500-க்கு விற்பனை செய்ய விளம்பரம் செய்திருந்தார்.
இதனை வாங்க முன்வந்த ஒரு நபரைச் சந்திக்க 'சவுத்கேட் மால்' (Southgate Mall) பகுதிக்குச் சென்றபோதுதான் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
திட்டமிட்டபடி பொது இடத்தில் அந்த நபரை ரிக் சந்தித்துள்ளார். வாங்குபவர் பணத்தை ஒரு உறையில் (Envelope) வைத்துக் கொடுத்துள்ளார். ரிக் அந்தப் பணத்தை இரண்டு முறை கவனமாக எண்ணிப் பார்த்துள்ளார்.

அதில் சரியாக 4,500 டொலர் இருந்துள்ளது. ஆனால், ரிக் கவனிக்காத நேரத்தில், அந்த நபர் தந்திரமாக ரிக் கையில் இருந்த பண உறையை மாற்றிவிட்டு, வேறொரு உறையை அவரிடம் கொடுத்துள்ளார்.
அந்த நபர் சென்ற பிறகு ரிக் உறையைத் திறந்து பார்த்தபோது, அதில் வெறும் இரண்டு 50 டொலர் கள்ள நோட்டுகளும், வெட்டப்பட்ட பழைய செய்தித்தாள்களும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பொது இடத்தில் சந்தித்தது, ரொக்கப் பணத்தை மட்டும் ஏற்றுக்கொண்டது, வாங்குபவரின் புரோஃபைலை சரிபார்த்தது என அனைத்து பாதுகாப்பு முறைகளையும் நான் பின்பற்றினேன்.ஆனாலும் ஏமாந்துவிட்டேன். இது எனக்கு மிகுந்த அவமானமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது என ரிக் தெரிவித்துள்ளார்.
அவர் உடனடியாக மால் பாதுகாப்புப் பிரிவினரை அணுகியபோதும், அவர்களால் பெரிய அளவில் உதவ முடியவில்லை. தற்போது இது குறித்து காவல்துறையில் ரிக் புகார் அளித்துள்ளார்.