உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் மூடப்பட்டது
பிரான்சில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
இதனை சமாளிக்க பட்ஜெட்டில் அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டன. அப்போது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
இதற்கிடையே நாட்டின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமிக்கப்பட்டார். ஆனால் இவரது நியமனம் போராட்டத்தை மேலும் தூண்டியது.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்கி, நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
அதன்பேரில் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிந்தனர். இதன் காரணமாக உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை அறியாமல் சென்றிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.