கனடாவில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது
கனடாவில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எட்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கனடாவின் கால்கரி நகரில் இயங்கிவந்த திட்டமிடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றப்பின்னணி கொண்ட கும்பலைக் குறிவைத்து 11 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை அடிப்படையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 18 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனைகளின் போது சுமார் 58,500 டொலர் மதிப்பிலான போதைப்பொருட்களையும், பல்லாயிரக்கணக்கான டாலர் ரொக்கப் பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
செப்டம்பர் 2025-இல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதக் குற்றங்கள், வாகனங்களின் அடையாள எண்களை மாற்றுதல் மற்றும் போலியான மருத்துவச் சீட்டுகள் மூலம் மருந்துகளைப் பெறுதல் போன்ற பல குற்றங்களில் ஈடுபட்ட ஒரு பெரும் வலையமைப்பினை அதிகாரிகள் கண்டறிந்தனர்.