போலி விண்வெளி வீரருடன் காதலில் விழுந்த மூதாட்டி ; பல லட்சம் மாயம்
ஜப்பானைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, விண்வெளி வீரர் எனக் கூறியவரிடம் ரூ. 6 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
ஹொக்கைடோ மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது பெண்ணுடன் மர்ம நபர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் சமூக ஊடகம் மூலம் தொடர்புகொண்டு நட்பாகியுள்ளார். தொடர்ந்து, அந்த பெண்ணுடன் பேசிவந்த நபர், தான் ஒரு விண்வெளி வீரர் என்று கூறி காதல் வலையில் சிக்கவைத்துள்ளார்.
ஆக்ஸிஜன் வாங்குவதற்கு பணம்
பின்னர், தான் தாக்குதலுக்கு உள்ளாகி விண்வெளியில் விண்கலத்துக்குள் சிக்கிக் கொண்டதாகவும், ஆக்ஸிஜன் வாங்குவதற்கு உடனடியாகப் பணம் தேவை என்றும் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.
மர்ம நபரின் கதையை நம்பிய பெண், தான் சேர்த்து வைத்திருந்த 10 லட்சம் யென் பணத்தை அவர் கூறிய கணக்குக்கு அனுப்பியுள்ளார். அதன்பிறகு, மர்ம நபர் அந்த பெண்ணைத் தொடர்புகொள்ளாத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், குடும்பத்தினரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ”தனிமையில் இருக்கும் வயதான பெண்கள் அல்லது ஆண்களைக் குறிவைத்து அவர்களை காதல் வலையில் சிக்க வைக்கும் கும்பல், சில நாள்களில் அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்கின்றனர்.
இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் வயதானவர்களைக் காதலிப்பது போல் நடித்து சுமார் 1,000 கோடி டாலர்கள் மோசடி செய்திருப்பதாக அமெரிக்க வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.