காசா மீது தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு உத்தரவு
காசா பகுதியில் உடனடி மற்றும் வலுவான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் இராணுவத்துக்கு, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு உத்தரவிட்டார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆலோசனைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நெத்தன்யாஹு காசா பகுதியில் உடனடி மற்றும் வலுவான தாக்குதல்களை மேற்கொள்ள இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர், நெத்தன்யாஹுவின் அலுவலகம், காசா சமாதான ஒப்பந்தத்தை ஹமாஸ் தெளிவாக மீறியுள்ளதாக கூறியது. இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட உடல் பாகங்கள், இன்னும் கணக்கில் இல்லாத 13 சிறைவாசிகளில் எவருடையதும் அல்ல என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இதற்கு பதிலாக, ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு அல்-காசம் பிரிகேட்ஸ், இஸ்ரேலின் “மீறல்களால்” தெற்கு காசாவில் மீட்கப்பட்ட ஒரு சிறை கைதியின் உடலை ஒப்படைக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) கட்டுப்பாட்டில் உள்ள மஞ்சள் கோட்டிற்கு கிழக்கே உள்ள பகுதியில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதாக, ஒரு இஸ்ரேல் இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
இந்த “மஞ்சள் கோடு” என்பது, அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் காசா பகுதியில் இருந்து விலகிய எல்லையை குறிக்கிறது.