மியன்மாரில் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் தேர்தல் ஆரம்பம் ; ஐ.நா சபை கடும் அதிருப்தி
மியன்மாரில் இன்று ஆரம்பமான தேர்தல் ஒரு ஏமாற்று நிகழ்வென தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளதுடன், பல தலைவர்கள் சிறையடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக பெரும்பாலான மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இராணுவ ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்களிப்பைத் தடுப்பவர்கள் அல்லது எதிர்ப்பவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

புதிய இராணுவ சட்டத்தின் கீழ் 200 இற்கும் அதிகமானவர்கள் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்று வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில், நாட்டில் குறைந்தது இரண்டு பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எறிகணை தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, தாய்லாந்து எல்லையை ஒட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மியன்மார் இராணுவ ஆட்சிக் குழுவின் தலைவர் மின் ஆங் ஹ்லேங் தேர்தல் வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டை மீண்டும் பல கட்சி ஜனநாயக ஆட்சி முறைமைக்குக் கொண்டு வருவதே தமது நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் வாக்களிக்க மறுப்பவர்கள் ஜனநாயகத்தை நோக்கிய முன்னேற்றத்தை நிராகரிப்பவவர்களாக கருதப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.
இராணுவ ஆட்சியினையும் தனது அதிகாரத்தையும் நிலைநிறுத்தி அங்கீகாரத்தை பெறும் நோக்கில் சீனாவின் ஆதரவுடன் இராணுவ ஆட்சிக்குழு இந்த தேர்தலை நடத்துவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் மியன்மாரின் தற்போதைய களநிலைமை குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் அல்லது அமைதியான முறையில் கூடுவதற்கான மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.