தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: கர்ப்பிணிப் பெண் உள்பட 11 பேர் கொடூரக் கொலை!
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில், கர்ப்பிணிப் பெண் உட்பட குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு, டர்பன் நகரின் தெற்கே உள்ள குவாமாகுத்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 13 ஆண்கள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் என 14 பேர் ஒன்று கூடி இருந்தனர்.
இரவு 11 மணியளவில், அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள், வீட்டில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு பேர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. எஞ்சிய மூவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் தப்பிச் செல்வதற்கு முன், பலியானவர்களில் ஒருவருக்குச் சொந்தமான காரை தீயிட்டு கொளுத்திவிட்டு ஓடியுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய சந்தேக நபர்களைப் பிடிக்க, காவல்துறையினர் 72 மணி நேரத் தீவிரத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
எனினும், தாக்குதலில் பலியானவர்களில் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
எனவே, எதிரெதிர் சட்டவிரோதக் குழுக்களுக்கு இடையே நிலவி வந்த முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். உலகின் அதிக கொலை விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் தென்னாப்பிரிக்கா திகழ்கிறது.
அங்கு நாளொன்றுக்குச் சராசரியாக 60-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்படுவதாகக் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குழுக்களுக்கிடையேயான மோதல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோதச் சுரங்கத் தொழில் போன்ற குற்றச் செயல்களே இத்தகைய வன்முறைகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகின்றன.
நாட்டில் அதிகரித்து வரும் இத்தகைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க, காவல்துறையினருக்கு உதவியாக ராணுவத்தையும் அதிபர் சிரில் ராமபோசா களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.