13 மணிநேர பயணம்... புறப்பட்ட விமான நிலையத்திலேயே தரையிறங்கிய விமானம்!
துபாயிலிருந்து நியூசிலாந்து நோக்கி புறப்பட்ட விமானம் 13 நேரம் பயணித்து மீண்டும் துபாயிலேயே தரையிறங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துபாய் விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை (27-01-2023) காலை 10.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நோக்கி புறப்பட்டது.
எமிரேட்ஸ் விமானத்தின் மிகவும் நீண்ட தூர பயண வழி துபாய் - ஆக்லாந்து இடையேயான தூரம் ஆகும். துபாய் - ஆக்லாந்து இடையேயான பயண தூரம் 16 மணி நேரம் ஆகும்.
இந்த நிலையில், விமானம் ஆக்லாந்து நோக்கி புறப்பட்டு பாதி தூரத்தை கடந்திருந்தது. ஆனால், நியூசிலாந்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆக்லாந்து விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்தது.
இவ்வாறான நிலையில், ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆக்லாந்து விமான நிலைய ஓடுதளம் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது.
விமானத்தை தரையிறக்க முடியாதது குறித்தும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் ஆக்லாந்து நோக்கி வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் விமான கேப்டனிடம் கூறினர்.
இதையடுத்து, பாதி தூரம் வந்த நிலையில் ஆக்லாந்தில் விமானத்தை தரையிறக்க முடியாததால் நடுவானில் விமானத்தை திருப்பிய கேப்டன் மீண்டும் துபாய் நோக்கி விமானத்தை இயக்கினார்.
பின்னர், மேலும் சில மணி நேர பயணத்திற்கு பின் ஆக்லாந்து நோக்கி புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் புறப்பட்ட விமான நிலையமான துபாய் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறங்கியது.
விமானம் ஒட்டுமொத்தமாக 13 மணி நேரம் நடுவானில் பறந்துள்ளது. 13 மணி நேரம் பயணம் செய்த விமானம் புறப்பட்ட துபாய் விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கியுள்ளது.
கனமழை காரணமாக ஆக்லாந்துக்கு விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நிலைமை சற்று சீரடைந்ததையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (29-01-2023) எமிரேட்ஸ் விமானம் மீண்டும் துபாயில் இருந்து புறப்பட்டது.
இந்நிலையில் 16 மணி நேரம் பயணித்த விமானம் நியூசிலாந்தில் பத்திரமாக தரையிறங்கியது.