உக்ரைன் போருக்கு முடிவு ; டிரம்ப் புதிய முயற்சி! புதின், ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை
ரஷியா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷியா–உக்ரைன் போருக்கு அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான தீர்வைக் காணும் நோக்கில், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வொலொதிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தனித்தனியாக தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் போர்க்கள நிலவரம், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பது மற்றும் அதில் அமெரிக்கா வகிக்கக்கூடிய பங்கு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினுடன் நடைபெற்ற சுமார் 90 நிமிட பேச்சுவார்த்தையின் போது, ரஷியாவின் அடிப்படை நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு போருக்கு அரசியல் மற்றும் ராஜதந்திர வழியில் தீர்வு காண விரும்புவதாக அவர் தெரிவித்ததாக ரஷிய அதிபர் மாளிகையின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யுரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷியா–உக்ரைன் மோதலுக்கு தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மத்தியஸ்த நடவடிக்கைகளைத் தொடரவுள்ளதாகவும், தேவையெனில் ரஷியாவுக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தனது சமூக ஊடகப் பதிவில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகள் குறித்து டிரம்புடன் கலந்துரையாடியதாகவும், அமைதியை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூலை 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டில், உக்ரைன் விவகாரமும் அமெரிக்காவின் பங்களிப்பும் முக்கிய விவாதப் பொருளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.