முடிவில்லாது 200 நாட்களாகத் தொடரும் போர்! பின்வாங்கிய ரஷ்யா
முடிவில்லாது தொடரும் போரில் உக்ரேனியப் படைகள் நாட்டின் கிழக்கு, தெற்குப் பகுதிகளை ரஷ்ய படையினரிடமிருந்து மீட்டெடுக்கும் பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.
உக்ரேனிய படையினரின் இந்த நடவடிக்கையானது ரஷ்யப் படையினரருக்கு அது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. உக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி 200 நாள்கள் ஆகியுள்ள நிலையில் இத்தகவல் வெளிவந்துள்ளது.
பின்வாங்கிய ரஷ்யா
ஹார்கிவ் (Kharkiv) பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் உக்ரேனியப் படைகள் செப்டம்பர் மாதத்திலிருந்து 3,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை மீட்டுள்ளனர். ஹார்கிவிலுள்ள இஸியும் (Izyum) நகரைவிட்டு ரஷ்ய வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் ரஷ்யப் படைகளின் தளவாட நடுவமாகச் செயல்பட்ட அந்நகரில் ஆயுதங்களும் கருவிகளும் விட்டுச்செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இஸியும் மீண்டும் உக்ரேனின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உறுதிசெய்தார்.
அதேசமயம் ரஷ்யா உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்துவதாகவும் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹார்கிவில் உள்ள மின்சார விநியோக நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஹார்கிவ், டொனெட்ஸ்க் (Donetsk) பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.