உலக எரிசக்தி பாதையில் நெருக்கடி ; ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உறுதி அவசியம்
ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய கடல்சார் முற்றுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் பயன்படுத்துவதற்குச் சில முக்கிய பாதுகாப்பு உத்தரவாதங்களை எதிர்பார்க்கின்றன.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் சட்டம் மற்றும் பாதுகாப்பு நிபுணர் ஜெனிபர் பார்க்கர் இது குறித்து விளக்குகையில், கப்பல்கள் தற்போது இந்தப் பாதையைப் பயன்படுத்தாததற்கு அது மூடப்பட்டிருப்பது காரணமல்ல, மாறாக அங்கு நிலவும் அதிகப்படியான அபாயமே காரணம் என்று குறிப்பிடுகிறார்.
கப்பல் நிறுவனங்கள் மீண்டும் போக்குவரத்தைத் தொடங்கத் பின்வரும் பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கோருகின்றன.

நீரிணையில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்பான இருப்பு நிறுவனங்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். ஞாயிற்றுக்கிழமை இரண்டு அழி கப்பல்கள் அந்தப் பாதையைக் கடந்தது இத்தகைய ஒரு பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
வணிகக் கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். நீரிணையில் கண்ணிவெடிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒருவேளை கண்ணிவெடிகள் இருப்பின், அவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பது முற்றிலும் பாதுகாப்பானது என்பதை அமெரிக்கா மற்றும் சர்வதேசப் படைகள் முறையாக உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தச் சவால்கள் நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில் மட்டுமே, உலக எரிசக்தி விநியோகத்திற்கு மிக அவசியமான இந்தப் பாதையில் கப்பல்கள் மீண்டும் பழையபடி பயணிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.