ஐரோப்பாவை வதைக்கும் வெப்ப அலை ; பிரான்ஸில் 1,000 பேர் பலி
ஐரோப்பா முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
வெப்ப அலையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆரம்பக்கட்ட தரவுகளை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

இதேவேளை உயிரிழந்தவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர்.
நாட்டில் மிகக் கடுமையான வெப்ப அலையினால் 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்ட பிராந்தியங்களிலேயே இந்த மரணங்கள் பெருமளவில் நிகழ்ந்துள்ளன.
தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய 'இல்-டி-பிரான்ஸ்' பிராந்தியத்தில், வீடுகளுக்குள் தனியாக வசித்து வந்தவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.