120 ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய ஐரோப்பிய நாடுகள்!
உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 230க்கும் மேற்பட்ட ரஷ்ய தூதர்களை வெளியேற்றியுள்ளன.
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்ததில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 230க்கும் மேற்பட்ட ரஷ்ய தூதர்களை தங்கள் நாடுகளிலிருந்து வெளியேற்றியுள்ளன.
ஏப்ரல் 5 ஆம் திகதி அன்று இத்தாலி, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகியவை ரஷிய தூதர்களை வெளியேற்றுவதில் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளுடன் இணைந்தன. கடந்த 48 மணி நேரத்தில் 120க்கும் மேற்பட்டோர் அனுப்பப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்ய துருப்புக்களின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வாரம் புச்சா நகரை உக்ரேனிய படைகள் மீண்டும் கைப்பற்றின.
அந்நகரம் ரஷ்ய துருப்புக்களில் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த நகரத்திற்கு உக்ரேனியர்கள் யாரும் செல்ல முடியவில்லை. உக்ரைன் நாட்டின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைக்கு பதிலடியாக 40 ரஷ்ய தூதர்களை ஜெர்மனி வெளியேற்றி உள்ளது.
இதன்படி அவர்கள் 5 நாட்களுக்குள் ஜெர்மனியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக 30 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளோம்" என இத்தாலி வெளியுறவு மந்திரி லூய்கி டி மியாவ் தெரிவித்துள்ளார்.
ஆனால் புச்சா மற்றும் பிற இடங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை ரஷ்ய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
பழிக்குப் பழி நடவடிக்கையாக லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியாவில் இருந்து 10 தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக ரஷ்யா கூறியது.