அமெரிக்காவின் எச்சரிக்கையால் 24 மணித்தியாலங்களில் நடந்த சம்பவம்
ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை இலக்கு வைத்து அமெரிக்காவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடல்சார் முற்றுகையின் முதல் 24 மணித்தியாலங்களில், எந்தவொரு கப்பலும் தடையை மீறிச் செல்லவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த முற்றுகை நடவடிக்கையில் 10,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைய முயன்ற அல்லது வெளியேற முயன்ற 6 வர்த்தகக் கப்பல்கள் அமெரிக்கப் படைகளின் கட்டளைக்கு இணங்கி, மீண்டும் ஈரானிய துறைமுகங்களுக்குள்ளேயே திரும்பிச் சென்றுள்ளன.
முற்றுகை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஈரானுடன் தொடர்புடைய நான்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்ததாக பிபிசி உறுதிப்படுத்தியிருந்த நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் அனைத்து நாடுகளினதும் கப்பல்களுக்கு இந்தத் தடை பொருந்தும் என சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஈரானுடன் தொடர்பில்லாத ஏனைய கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையானது ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை முற்றாக முடக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.