இங்கிலாந்தில் சக மாணவிகள் நால்வரை பாலியல் வன்கொடுமை; மாணவருக்கு 25 ஆண்டுகள் சிறை
இங்கிலாந்தின் பிரைட்டன் (Brighton) பகுதியில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) பயின்று வந்த 26 வயது மாணவர் அலெக்ஸ் படேல்-வில்ஸ் (Alex Patel-Wills), தனது சக மாணவிகள் நால்வரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தால் (Lewes Crown Court) 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில், பல்கலைக்கழக வளாகம், லண்டன் மற்றும் பிரைட்டன் நகரங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இவர் இந்த கொடூரமான தாக்குதல்களை நடத்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

நீண்ட கால விசாரணை
இந்த விவகாரம் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிச்சத்திற்கு வந்தது.
பிரைட்டனில் உள்ள ஒரு குடியிருப்பில் படேல்-வில்ஸ் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் தைரியமாகப் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாகக் கைது செய்யப்பட்ட படேல்-வில்ஸிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் பல ஆண்டுகளாக இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் நான்கு பெண்கள் முன்வந்து அவர் தங்களுக்கு இழைத்த கொடுமைகளை விவரித்த நிலையில், வழக்கின் தீவிரம் அதிகரித்தது. பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் படேல்-வில்ஸுடன் அதே பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்.
அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அவர்களைத் தனிமைப்படுத்தி இந்தப் பாலியல் வக்கிரங்களை அவர் அரங்கேற்றியுள்ளார்.
விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்ததும், மற்ற பெண்களை அவர்கள் உடல்நிலை சரியில்லாத அல்லது தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தபோது தாக்கியதும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.
இந்த நீண்ட கால விசாரணையின் முடிவில், ஜூரி குழுவினர் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒருமனதாக உறுதி செய்தனர்.
நீதிமன்றம் வழங்கிய இந்த 25 ஆண்டு காலத் தண்டனை, பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் நீதியாகக் கருதப்படுகிறது. இதில் 19 ஆண்டுகள் அவர் கட்டாயமாகச் சிறையில் இருக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 6 ஆண்டுகள் அவர் கடுமையான கண்காணிப்பில் (Extended Licence) இருப்பார் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற வக்கிர புத்தி கொண்ட நபர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க இது ஒரு பாடமாக அமையும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களின் துணிச்சலான சாட்சியமே இந்த வெற்றியற்குக் காரணம் என அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.