குறைவான ஆழமுள்ள பகுதியில் தரைதட்டி நின்ற பயணிகள் கப்பலால் பரபரப்பு!
இந்தோனேஷியாவில் கடலில் குறைவான ஆழமுள்ள பகுதியில் தரைதட்டி நின்ற பயணிகள் கப்பல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு, பயணத்தைத் தொடங்கியது.
2 நாட்களுக்கு முன்பு 784 பயணிகள், 55 பணியாளர்கள் என மொத்தம் 800 பேருடன் மவுமர் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கே.எம்.சிரிமாவ் கப்பல், ஈஸ்ட் நுசா தெங்கரா மாகாணத்தில் ஆழம் குறைவான கடல் பகுதியில் தரைதட்டி நின்றது.
இதையடுத்து அதனை விடுவிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன.
அந்நாட்டு நேரப்படி, வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் விடுவிக்கப்பட்ட அந்த கப்பல், லெவோலேபா துறைமுகத்திற்கு சென்று குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்னர், அங்கிருந்து ஃபுளோரஸ் தீவில் உள்ள மவுமர் நகர் நோக்கி சென்றதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

