பிரதமர் மார்க் கார்னியின் 'தேசிய மின்சாரத் திட்டம்' வெளியீடு
கனடாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசின் 'தூய்மையான மின்சார வியூகம்' குறித்த அறிவிப்பை பிரதமர் மார்க் கார்னி வியாழக்கிழமை வெளியிடுகிறார்.
'தேசிய மின்சார நிகழ்ச்சி நிரல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மின் கட்டமைப்பு விரிவாக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2050-ஆம் ஆண்டிற்குள் கனடாவின் மின்சாரக் கட்டமைப்புத் திறனை (Grid Capacity) தற்போதிருப்பதை விட இருமடங்காக அதிகரித்தல்.

தூய்மையான எரிபொருளுக்கு மாறும் அதே வேளையில், மின்சாரம் நம்பகமானதாகவும் மலிவானதாகவும் இருப்பதை உறுதி செய்தல். 2050-க்குள் 70% வீடுகளின் ஒட்டுமொத்த எரிசக்தி செலவைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் 2028-ஆம் ஆண்டிற்குள் சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகளும், 2050-க்குள் 1,00,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். இந்த மெகா திட்டம் நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது:
கட்டமைப்பு உருவாக்கம்: மின் உற்பத்தித் திறனை இருமடங்காக்கத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்.
தேசிய இணைப்பு: புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட மின் கடத்திகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் வலைப்பின்னல்களை ஒன்றிணைத்தல். பணியாளர் நியமனம்: மின் கட்டமைப்பை உருவாக்கத் தேவையான நிபுணர்களைப் பணியமர்த்துதல்.
உள்நாட்டுத் தயாரிப்பு: மின் உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் உதிரிபாகங்களை கனடாவிலேயே தயாரித்தல்.
கனடிய காலநிலை நிறுவனத்தின் (CCI) அண்மைய அறிக்கையின்படி, கார்பன் உமிழ்வு இலக்குகளை அடைய கனடா தனது மின்சாரக் கட்டமைப்பை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும். மக்கள் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் ஹீட் பம்புகளுக்கு வேகமாக மாறி வருவதால், மின்சாரத் தேவை எதிர்காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.