புதிய வழித்தடங்களுக்கு சேவையை விரிவுபடுத்தும் கனேடிய விமான சேவை நிறுவனம்
கனடாவின் எட்மண்டனில் இருந்து இயங்கும் ஃப்ளேயர் ஏர்லைன்ஸ் புதிய வழித்தடங்களுக்கு சேவையை விரிவுபடுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் ஒருபகுதியாக 2022ல் புதிதாக 4 போயிங் 737 மேக்ஸ் விமானங்களையும் இணைத்துக் கொள்ள இருக்கிறது. இதனால் ஃப்ளேயர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 16 விமானங்கள் செயற்பாட்டில் இருக்கும் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், சான் பிரான்சிஸ்கோ, நாஷ்வில்லே மற்றும் டென்வர் உள்ளிட்ட புதிய வழித்தடங்களுக்கும் சேவையை தொடங்க உள்ளனர். மட்டுமின்றி, ரொறன்ரோ, விக்டோரியா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Comox ஆகிய பகுதிகளுக்கு முதன் முறையாக சேவையை துவங்க உள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 6 வழித்தடங்களுக்கும், கனடாவில் 18 வழித்தடங்களில் மட்டும் இயங்கிவந்த நிலையில் இனி இந்த எண்ணிக்கை 28 என அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நகரங்களுக்கு 99 டொலரில் இருந்து 129 டொலர் வரையில் ஒருவழிப்பாதைக்கு கட்டணம் இருக்கும் எனவும், கனடாவில் உள்ளூர் நகரங்களுக்கு மிகவும் குறைந்த கட்டணமாக 49 டொலராக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நான்கு விமானங்களை இணைத்துக் கொள்வதால் 150 புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் என ஃப்ளேயர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி ஃப்ளேயர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தற்போது விமானிகள் பணியிடங்கள் 100 எண்ணிக்கையில் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.