திடீர் குண்டு வெடிப்பு: தாலிபான் ஆளுநர் கொலை! பதற்றத்தில் மக்கள்
ஆப்கானிஸ்தான் - வடக்கு பால்க் மாகாணத்தினுடைய தாலிபான் ஆளுநர் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தாலிபான் ஆளுநர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு தாலிபான்கள் ஆட்சியில் கொல்லப்பட்ட மூத்த அதிகாரி முகமது தாவூத் முஸம்மில் ஆவார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வன்முறை வெகுவாக குறைந்துள்ளதாகத் தாலிபான்களின் அரசு தரப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் பால்க் மாகாணத்தின் ஆளுநர் குண்டுவெடிப்பில் உயிரிழந்திருப்பதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளது.
தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் ட்விட்டரில், "இஸ்லாமிய எதிரிகளால் வெடிகுண்டு வெடித்ததில் ஆளுநர் வீரமரணம் அடைந்தார்" என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது, என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக முஸம்மில், கிழக்கு மாகாணமான நங்கர்ஹரின் ஆளுநராக இருந்துள்ளார்.
அப்போது அவர் இஸ்லாமிய தேசப் போராளிகளுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவர் கடந்த ஓக்டோபரில் பால்கிற்கு ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
பால்க் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வஜிரி கூறுகையில்,
சம்பவ தினத்தன்று "காலை 9 மணியளவில்... ஆளுநர் அலுவலகத்தின் இரண்டாவது மாடிக்குள் குண்டு வெடிப்பு ஏற்பட்டது" எனக் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் மேலும் ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குண்டுவெடிப்பில் காயம் அடைந்த கைருதீன், செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,
"ஒரு சத்தம் ஏற்பட்டது. நான் தரையில் விழுந்தேன். குண்டுவெடிப்பில் அலுவலகத்திலிருந்த ஒருவர் கையை இழந்ததைக் கண்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வெடிப்பு ஆளுநர் சரியாகத் தனது அலுவலகத்திற்குள் நுழைந்து பிறகு தான் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
இஸ்லாமிய விரோதிகள் தான் இதைச் செய்திருக்க வேண்டுமெனத் தாலிபான்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் விசாரணையில் உண்மை கண்டறியப்படும் என கூறியுள்ளது.