முகம் தெரியாத மனிதர் செய்த உதவி; கதறி அழுத நபர்
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில், வீடற்ற மனிதர் ஒருவர் தனக்கு கண் கண்ணாடி வாங்க தேவையான பணம் சேர்க்க முடிவு செய்துள்ளார். அதற்காக ஜன்னல்களை கழுவும் வேலையில் ஈடுபட்டார்.
கண்ணாடி வாங்க அவருக்கு 150 டாலர் பணம் தேவைப்பட்ட நிலையில் அவர் சிறுக சிறுக பணம் சேகரித்து வந்துள்ளார். அப்போது முகம் தெரியாத நபர் ஒருவர் அவருக்கு உதவி செய்துள்ள வீடியோ காண்போரை கலங்க வைக்கிறது.
அந்த வீடியோவில், அந்த நபரிடம், உதவி செய்பவர் உரையாடுகிறார். அப்போது, தான் கண்ணாடி வாங்க 150 டாலர் தேவைப்படுவதாக தெரிவிக்கும் வீடற்ற மனிதர், இதற்காக ஜன்னல்களை கழுவி பணம் சேர்ப்பதாக தெரிவிக்கிறார்.
மேலும், ஒரு ஜன்னலை கழுவினால் தனக்கு 1 டாலர் கிடைக்கும் என கூறுகிறார். அப்போது வீடியோ பதிவு செய்தவர், அன்றைய நாளில், உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது என கேட்கிறார்.
தன் பர்சை ஓபன் செய்து பார்க்கும் அந்த நபர், வெறும் 11 டாலர் பணம் மட்டுமே சேர்ந்திருக்கிறது என பதிலளிக்கிறார். அதில் சில அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை வாங்க வேண்டும் எனவும் அவர் கவலையுடன் கூறுகிறார்.
அவர் வாழ்வில் படும் போராட்டங்களை கேட்ட வீடியோ எடுப்பவர், அவருக்கு உதவி செய்ய முன்வந்து, 500 டாலர் பணம் அளித்து உதவுகிறார். இதனை கண்ட அந்த வீடற்ற மனிதர், கண்ணீருடன் உடைந்து அழுகிறார்.
பின் உதவி செய்தவருக்கு நன்றி தெரிவித்து கட்டி அணைக்கிறார்.