பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!
பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள இந்நிலையில்,
“பேராயர் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபட்டதால், அவரை தமது எதிர்கால நடவடிக்கைகளில் புறக்கணிக்க வத்திக்கான் முடிவெடுத்துள்ளதாக” செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.
சகோதர செய்தித்தளமொன்றில் இச் செய்தி வெளியாகியுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், குறித்த இணையதளம் அவ்வாறான செய்தியை பிரசுரிக்கவில்லை என factseeker உறுதிப்படுத்தியுள்ளதுடன்,
குறித்த இணையதளத்தின் லோகோவை பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இது குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பணிப்பாளர் பாதிரியார் ஜூட் கிருஷாந்திடம் FactSeeker வினவியத்தில், “சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்ற அந்த செய்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல், வத்திக்கானின் உத்தியோகபூர்வ இணையதளத்திலோ அல்லது வத்திக்கானுடன் நெருக்கமாக செயற்படும் ஊடகங்கள், நிறுவனங்களோ இவ்வாறான எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.