சிரிப்போடு சிந்திக்கவும் வைத்த பிரபல நடிகர் திடீர் மரணம்; சோகத்தில் ரசிகர்கள்
சின்னக் கலைவாணர் என பலராலும் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் உயிரிழந்துள்ளமை தமிழகத்தில் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
விவேகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட 59 வயதான நடிகர் விவேக், திரையுலகில் விவேகம் மிக்க நகைச்சுவையால் தனித்தன்மையோடு மிளிர்ந்தவர். துணை நடிகராக அறிமுகமாகி, சிரிக்க வைக்கும் திறனால் வளர்ந்து, ஒரே ஆண்டில் சுமார் 20 படங்களில் நடிக்கும் அளவுக்கு மிகவும் பிசியான காமெடி ஆர்ட்டிஸ்டாக திகழ்ந்தவர்.
அறிமுக கதாநாயகர்கள் தொடங்கி, முன்னணி கதாநாயகர்கள் வரை விவேக்கின் நகைச்சுவை திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த காலம்தான், திரையுலகில் அவரது உச்சம். கடந்த 2015ஆம் ஆண்டு விவேக்கின் 13 வயது மகன் பிரசன்னா குமார் அகால மரணமடைந்தது, அவரது வாழ்வின் பெருந்துயரமாக அமைந்துவிட்டது.
கடைசியாக அவர் 2020ஆம் ஆண்டில் தாராள பிரபு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நேற்று முற்பகலில் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது , திடீரென மயக்கம் ஏற்பட்டு, வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டார். மிகக்கடுமையான மாரடைப்பால் விவேக் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதயம், நுரையீரலின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் எக்மோ கருவி மூலமும் விவேக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதல் நாள் வரை நல்ல உடல்நலத்தோடு காணப்பட்ட விவேக், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, தமிழகத்திற்கே பெரும் அதிர்ச்சியான செய்தியாகவே அமைந்தது.
இந்நிலையில், அவரது மரணம் தமிழ்த் திரையுலக ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்னக் கலைவாணர் என செல்லமாக அழைக்கப்படும் விவேக் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர், இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் விவேக் எனக் கூறியுள்ள முதலமைச்சர், நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் . இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ என மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.