மண்ணே இல்லாமல் 30 மாடிகளில் விவசாயம் ; சிங்கப்பூரின் வியக்க வைக்கும் முயற்சி
சிங்கப்பூரில் நிலப்பரப்பின் பற்றாக்குறைக்கு மத்தியில் விவசாயத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது
சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 30 மாடி உயரமான செங்குத்து விவசாயப் பண்ணையில், மண் இல்லாமல் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

வழமையான விவசாய முறைக்கு மாறாக, குறித்த பண்ணையில் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறையில் தண்ணீரில் கரைக்கப்பட்ட சத்துக்களைப் பயன்படுத்தி பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.
மேலும், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வெளிச்சம் LED விளக்குகள் மூலம் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பாரம்பரிய விவசாய முறைகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 95 சதவீதம் வரை தண்ணீரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், காலநிலை மாற்றம், அதிக வெப்பம், மழை உள்ளிட்ட இயற்கை காரணிகளின் தாக்கம் குறைவாக இருப்பதால், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக காய்கறிகளை உற்பத்தி செய்யக்கூடிய வசதி காணப்படுகிறது.

குறித்த செங்குத்து விவசாயப் பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் ஒரு தொன் வரையான புதிய காய்கறிகள் அறுவடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலப்பரப்பு குறைவாக உள்ள நாடுகளில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான மாற்று வழியாக செங்குத்து விவசாயம் உலகளவில் கவனம் பெற்று வரும் நிலையில், சிங்கப்பூரின் இந்த முயற்சி நவீன விவசாயத் தொழில்நுட்பத்தின் முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
நிலத்தை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, கிடைக்கும் இடத்தை செங்குத்தாகப் பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது.