ஒட்டாவா ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தந்தை
ஒட்டாவா நகரில் உள்ள வெஸ்ட்பரோ கடற்கரைக்கு அருகே உள்ள ஒட்டாவா ஆற்றில் நீரில் மூழ்கி ஒரு ஆண் உயிரிழந்துள்ளார். அவருடன் இருந்த எட்டுவயது சிறுவன் பொது மக்களின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.
புதன்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் தந்தை மற்றும் மகன் தண்ணீரில் மூழ்கியதாக ஒரு அழைப்பு வந்ததை அடுத்து, முதலுதவிக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சோனார் தொழில்நுட்பத்தின் (SONAR) உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 2.25 மணியளவில் ஆண் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என ஒட்டாவா தீயணைப்பு சேவையின் தலைவர் பால் ஹட் தெரிவித்துள்ளார்.
முயற்சிகள் பல செய்த போதும், அந்த ஆண் உயிரிழந்ததாக சம்பவ இடத்திலேயே அறிவிக்கப்பட்டது என ஒட்டாவா உயிர்காப்பு சேவை தெரிவித்துள்ளது. அந்தச் சிறுவனை அருகில் இருந்த பொது மகனொருவர் விரைவாக செயல்பட்டு மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் வெஸ்ட்பரோ கடற்கரை பகுதியில் நேர்ந்ததல்ல என்றும், அங்கு பணியாற்றிய நகர காவலாளிகள் இதில் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தந்தை மற்றும் மகன் ஏன் நீருக்குச் சென்றனர் என்பது இதுவரை தெரியவில்லை.
இந்த மிகுந்த வலி மிக்க தருணத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்,என ஒட்டாவா பொலிஸார் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.